×

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இணைப்புச்சாலை பள்ளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சுழி, மார்ச் 21: காரியாபட்டியில் இருந்து திருச்சுழி வரும் வழியில், ரயில்வே மேம்பால இணைப்புச்சாலை பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரியாபட்டியிலிருந்து திருச்சுழிக்கு வரும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுழி வழியாக ராமேஸ்வரம், கமுதி, சாயல்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் குறுக்கு வழியாக இந்த பாலத்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே பாலத்தில் தார்ச்சாலை இணைப்பு பகுதி பள்ளமாக இருப்பதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்குகின்றனர்.
மேம்பாலத்தில் பக்கவாட்டுச் சுவர் சரியாக அமைக்காததால், இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் அச்சத்துடன் கடக்கின்றனர். மேம்பாலத்தில் இருபுறமும் தடுப்புச்சுவர் சரியாக இல்லாததால், வளைவாக உள்ள பகுதியை கடக்கும்போது அச்சத்துடன் கடக்கின்றனர். இரவு நேரத்தில் எதிரே வரும் வாகன முகப்பு விளக்குகள் எரியும்போது சாலையோரம் பள்ளம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, விபத்து ஏற்படும் வகையிலுள்ள பள்ளத்தையும், வளைவான பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து டி.கல்லுபட்டி சுரேஷ் கூறுகையில், ‘எங்கள் ஊரிலிருந்து ராமேஸ்வரம், கமுதி, சாயல்குடி ஊர்களுக்கு குறுக்கு வழியாக செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகிறோம். ரயில்வே பாலத்தை இணைக்க கூடிய தார்ச்சாலை பள்ளமாகவும், பாலம் மேடாக இருப்பதால் வருகிற வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். ரயில்வே மேம்பாலச்சாலை குறுகலாக இருப்பதாலும், இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால், இரு வாகனங்கள் விலகும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் பன்றிகள் கூட்டமாக சாலையைக் கடக்கும்போது விபத்தை ஏற்படுகிறது. ரயில்வே மேம்பாலத்தில் உள்ள வளைவுப் பகுதியில் தடுப்புச்சுவர் எழுப்பவும், பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : motorists ,pedestrian tunnel ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...